Last Updated : 16 Sep, 2021 06:23 PM

 

Published : 16 Sep 2021 06:23 PM
Last Updated : 16 Sep 2021 06:23 PM

அரசு ஐடிஐயில் உதவித்தொகையுடன் பயிற்சி: 18, 26-ம் தேதிகளில் நேர்காணல்

உதவித்தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சியில் சேருவோருக்காக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''உலக வங்கியின் நிதி உதவியுடன் மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் 'ஸ்டிரைவ்' திட்டத்தில் கோவை கொடிசியாவின் கீழ் வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி புரோகிரோம் ஆப்பரேட்டர் தொழிற்பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சி பெறத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று முதல் ஆறு மாதங்கள் அடிப்படைப் பயிற்சி மற்றும் அதனைத் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தபின் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசால் தொழில் பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) வழங்கப்படும். இச்சான்றிதழினைக் கொண்டு இந்தியா மற்றும் அயல்நாட்டுப் பணிகளுக்கும் செல்ல முடியும்.

இது தொடர்பாக வரும் 18, 26-ம் தேதிகளில் கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர ஆவன செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3 ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 88256 03119, 81270 47178 மற்றும் 0422- 2642044 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்''.

இவ்வாறு திறன் பயிற்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x