Last Updated : 30 Aug, 2021 06:54 PM

 

Published : 30 Aug 2021 06:54 PM
Last Updated : 30 Aug 2021 06:54 PM

முதுகலை படிப்புகளுக்கான ஜிப்மர் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு புதுச்சேரி எம்.பி. கடிதம்

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இறுதித் தேர்வு நடத்தப்படாத சூழலில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஜிப்மர் கலந்தாய்வை ஒத்திவைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "புதுவையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜிப்மர் நிறுவனத்தில் சுகாதார அறிவியல் தொடர்புடைய படிப்புகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு இந்த வாரத்தில் கலந்தாய்வுத் தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நீட் தேர்வு பல முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் மாத மத்தியில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் சுகாதார அறிவியல் தொடர்புடைய படிப்புகளில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான இறுதித் தேர்வை நடத்தவில்லை.

இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறவில்லை. இவ்விஷயத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் தலையிட வேண்டும். ஜிப்மர் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு கலந்தாய்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். இறுதி ஆண்டுத் தேர்வு முடியும் வரை காலக்கெடு வழங்க வேண்டும்" என்று எம்.பி. வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகல் மத்திய சுகாதாரத் துறைச் செயலருக்கும், ஜிப்மர் இயக்குநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x