

உயர்கல்வியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு சேர்க்கை பெறுவதில், அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"தொழிற்கல்வி படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களைவிட, கிராமப்புறப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் சேருவதைக் கருத்தில் கொண்டு, 1997-ம் ஆண்டு கிராமப்புறப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, 2006ஆம் ஆண்டு தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 2007-08ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இருப்பினும், நம் மாநிலத்தில் பல ஆண்டுகளாகத் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அரசுப் பள்ளி மாணவர்கள், விரும்பும் உயர் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகளில் சேருவது குறைவாகவே உள்ளது. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெறுவதில் சம வாய்ப்பு கிடைக்கப் பெறுவதில்லை.
ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட துறைகளில், இளநிலை தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது.
இதன் காரணங்களை ஆராயவும், தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில், உயர் அதிகாரிகள் கொண்ட ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. தமிழகப் பள்ளிகளில் 1.3 கோடி பேர் பயின்று வருகின்றனர். 2019-20ஆம் கல்வியாண்டில் 8.5 லட்சம் பேர் பிளஸ் 2 மாணவர்களாவர். அவர்களில் 3.45 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாவர்.
ஆனால், பொறியியல் கல்வியில் 2020-21ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83% ஆகும். இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் முறையே 6.31%, 0.44% மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.
கால்நடை படிப்பிலும் 2020-21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 3% மட்டுமே உள்ளது. இது, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் குறைவு. கடந்த ஆண்டில் 3.7% அரசுப் பள்ளி மாணவர்களே மீன்வளம் படிப்பிலும் சேர்ந்துள்ளனர். வேளாண்மை தொழிற்கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 8.9% ஆக உள்ளது.
திருச்சி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதில், அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. இவ்வாறு தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு சேர்க்கை பெறுவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.
ஏழ்மை நிலை, அறியாமை, போதிய வழிகாட்டுதலின்மை காரணமாக, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தொழிற்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வை குறைவாகப் பெற்றுள்ளனர். எனவே, இதனை நன்கு ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தீர்வுகளைப் பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%-க்குக் குறைவாக இல்லாமல் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்தது.
ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கியதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5% ஒதுக்கீடு இடங்கள், முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.