Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு 1.74 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய பதிவு நேற்று (ஆக. 24) நிறைவு பெற்றது.

கரோனா பாதிப்பு காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பொறியியல் படிப்புகளுக்குக் கடந்த ஆண்டைவிடநடப்பாண்டில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, பதிவு தொடங்கிய முதல் நாளில் 25 ஆயிரத்து874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அதில், 1,38,533 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டைவிட அதிகம்

பொறியியல் சேர்க்கையைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, நடப்பாண்டில் 13 ஆயிரத்துக்கும் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இருந்தபோதிலும் கடந்த ஆண்டு 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர்.

ஆனால், தற்போது அதிக மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றியுள்ளதால் (1.38 லட்சம்) கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கு அதிக மாணவர்கள் தகுதிபெற வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

இதற்கிடையே, விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்றும், தரவரிசை பட்டியல் செப். 4-ம் தேதியும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x