Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

9 முதல் 12 வரையான வகுப்புகளுக்கு செப்.1-ல் பள்ளிகளை திறக்க திட்டம்; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொது சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களுக்கு அனு மதி, காய்ச்சல் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களை அனுமதிக்கக் கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதார இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் செப்.1-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது. கீழே கொடுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பள்ளி நிர்வாகத்தினருடன் இணைந்து செயல்படுமாறு அனைத்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். வாரம் ஒருமுறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் குழந்தைகளுக்கு வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத் திரைகளை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடும் வயதுடைய அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். பள்ளிகளில் வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் பணியில் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற் பார்வையாளர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

வகுப்பறையில் சமூக இடைவெளி

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக பள்ளி வளாகம், வகுப்பறை, தண்ணீர் தொட்டி, சமையலறை, கேண்டீன், ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும். உடல் வெப்பநிலையை அளவிடும் வகையில் போதுமான தெர்மாமீட்டர்கள் மற்றும் போதிய கிருமிநாசினி, சோப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாணவர்கள் பயணம் செய்யும் வாகனங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். வகுப்பறையில் 6 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு மாணவரும் உட்கார வைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகம், ஆசிரியர் ஓய்வறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வெளியே ரம்மியமான காலநிலை நிலவும் பட்சத்தில் திறந்தவெளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம். பள்ளி வரவேற்பறையில் 6 மீட்டர் இடைவெளி விட்டு இருக்கைகள் போட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் எங்கேயும் எச்சில் துப்பக் கூடாது. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில் மாணவர்கள் வருவதற்கு ஒரு வழியும், வகுப்பு முடிந்து வெளியே செல்வதற்கு மற்றொரு வழியும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கு வராத நாளில் 50 சதவீத மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்கலாம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம்.

சமூக இடைவெளியை பின்பற்றப்பட முடியாத எந்தவித நிகழ்ச்சிகளையும் பள்ளிகளில் நடத்தக் கூடாது. அனைத்து கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாப்பாளர் மட்டும் வந்தால் போதும். குழந்தைகள் வரத் தேவையில்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது. நோய் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x