Last Updated : 18 Aug, 2021 08:06 PM

 

Published : 18 Aug 2021 08:06 PM
Last Updated : 18 Aug 2021 08:06 PM

கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் கல்வி: புதுவை அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது

புதுச்சேரி

கிராமப்புற மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் கல்வி பயிற்றுவித்து வரும் புதுச்சேரி அரசுப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி ஆசிரியரும் ஒருவர். இந்த வருடம் புதுச்சேரி மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஜெயசுந்தர் (41) இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார். அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஜெயசுந்தருக்கு, கிராமப்புற மாணவர்களுக்குப் புதுமையான முறையில் கல்வி கற்பிப்பதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பள்ளி தரப்பில் கூறுகையில், ‘‘வகுப்பறைக் கல்வி மட்டுமின்றி, செல்முறைக் கல்வி, அனுபவக் கல்வி, பசுமைக் கல்வி, ஆன்லைன் முறையில் கல்வி என கிராமப்புற மாணவர்களுக்கு புதுமையான முறையில் கல்வி பயிற்றுவித்து வருகிறார்.

மேலும் அறிவியல் கண்காட்சி, பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்தும் அறிவியல் உருவாக்குவோம், குழந்தைகள் அறிவியல் மாநாடு போன்று உலக அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகள், மாநாடுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பி வருகிறார். அவற்றில் மாணவர்கள் பங்கேற்று பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்று வருகின்றனர்.

மேலும் பள்ளியைச் சீரமைத்தல், பசுமைப் பள்ளியை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்துதல், ஒரு மாணவருக்கு ஒரு மரக்கன்று நடும் திட்டம், ஏரி சீரமைப்பு போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் ஜெயசுந்தர் கூறுகையில், ‘‘இப்பள்ளியில் 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். தொடர்ந்து எங்கள் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர். குறிப்பாக பாரீஸ் பல்கலைக்கழகத்தில் ’அறிவியல் உருவாக்குவோம்’ மாநாட்டில் 2 முறை வென்று 100 யூரோ பரிசு பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும், தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் 2 முறை பரிசுகளை வென்றுள்ளனர். ‘இன்ஸ்பையர் மானக்’ போட்டியில் தேசிய அளவில் 2 முறை வென்று ரூ.25 ஆயிரம் வரை பரிசும், மாநில அளவிலான இன்ஸ்பையர் போட்டியில் 8 முறை பரிசும் பெற்றுள்ளனர்.

குறிப்பாகக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு இதுவரை 50 அறிவியல் திட்டங்களை எங்களது குழந்தைகள் சமர்ப்பித்துள்ளனர். இவற்றில் இரண்டு திட்டங்கள் தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் ஐசிடி முறையில் கல்வி பயின்றனர்.

எங்கள் பள்ளியை மற்ற அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் அளவில் மாற்றியுள்ளோம். பள்ளியை கோவா, டையு டாமனைச் சேர்ந்த மாணவர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதுபோல் புதுச்சேரியைச் சேர்ந்த பிற அரசுப் பள்ளி மாணவர்களும் பார்வையிட்டுள்ளனர்.

புதுவிதமான கல்வி முறையை உருவாக்குதலுக்காக 2018-19 என்சிஇஆர்டி விருதும் எனக்குக் கிடைத்துள்ளது. இவை அனைத்துமே இவ்விருதுக்கு முக்கியக் காரணம். அதனடிப்படையில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x