

வேலூர் விஐடி பல்கலையில் 75-வது சுதந்திர தின விழா, பாரதியார் நினைவு நூற்றாண்டு மற்றும் நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு புகைப்பட கண்காட்சி என ‘முப்பெரும் விழா’ நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து, தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதைசெலுத்தினார். அப்போது அவர்பேசும்போது, "இந்தியா அனைத்துதுறைகளிலும் வளர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.05 டிரில்லியன் டாலராக உள்ளது. இதை 5 டிரில்லியன்டாலராக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை நிறைவேற்ற நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
இந்தியர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும். இது சாத்தியமாக அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் வரி செலுத்த தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வரி செலுத்த வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, நேதாஜியின் 125-வது பிறந்த ஆண்டு விழா மற்றும் மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை ஒட்டி தேசிய சிந்தனைக் கழகம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை விஐடி வேந்தர் திறந்து வைத்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராம்பாபு கொடாலி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.