

விழுப்புரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு, பழங்குடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா பெருந்தொற்று எதிரான ஆயுதமாக தடுப்பூசி இருந்தாலும் அதைச் செலுத்திக்கொள்வதில் மக்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாகப் பழங்குடியின மக்கள் தடுப்பூசியை அச்சத்துடனேயே அணுகி வருகின்றனர்.
அதேபோல கோனேரிக்குப்பம், நல்லாத்தூர், நங்குணம், பள்ளிப்பாக்கம் பழங்குடியின கிராம மக்கள் அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கத்துடனும், விருப்பமின்றியும் இருந்தனர். எனினும் கோனேரிக்குப்பம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தொடர் விழிப்புணர்வு மற்றும் முயற்சியால் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்று காலை 10 மணி அளவில் ஒலக்கூர் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100% அனைவருக்கும் தடுப்பூசி முகாம் மற்றும் கரோனா நிவாரணம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 180 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக கம்யூனிட்டி கேர் ட்ரஸ்ட் சார்பில் நிவாரணமாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக கரோனா விழிப்புணர்வுப் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.