Published : 03 Aug 2021 01:56 PM
Last Updated : 03 Aug 2021 01:56 PM

நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள்; உ.பி.யில் இருந்தே பெரும்பாலானவை: யுஜிசி 

புதுடெல்லி 

நாடு முழுதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி கண்டறிந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மக்களவையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

’’மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மின்னணு, அச்சு ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளது. யுஜிசியின் அனுமதி பெறாமல் இயங்கிவரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. அவை அனைத்தும் யுஜிசி விதிகளுக்கு முரணாகச் செயல்படுகின்றன. அவற்றுக்கு மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை.

போலிப் பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 8, டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலிப் பல்கலைக்கழகம் உள்ளது. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி என்னும் போலிப் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் செயல்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் வாரணசேய சமஸ்கிருத விஸ்வா வித்யாலயா, வாரணாசி; மகிளா கிராம் வித்யாபீடம் அலகாபாத்; காந்தி ஹிந்தி வித்யாபீடம், அலகாபாத்; தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர்; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அலிகர்; உத்தரப் பிரதேச விஸ்வா வித்யாலயா, மதுரா; மகாராணா பிரதாப் சிக்‌ஷா நிகேதன் விஸ்வா வித்யாலயா, பிரதாப்கர் மற்றும் இந்திரப்பிரஸ்தா சிக்‌ஷா பரிஷத், நொய்டா ஆகிய 8 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

டெல்லியில் வணிகப் பல்கலைக்கழகம், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், தொழிற்பயிற்சி பல்கலைக்கழகம், ஏடிஆர் மைய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆத்யாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிகப் பல்கலைக்கழகம்) ஆகிய 7 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை: நவபாரத் சிக்‌ஷா பரிஷத், ரூர்கேலா மற்றும் வடக்கு ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இந்திய மாற்று மருத்துவம், கொல்கத்தா மற்றும் மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா ஆகியவை ஆகும்.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு போலிப் பல்கலைக்கழகம் உள்ளது. அவை - ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி புதுச்சேரி; கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம்; ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்; செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கேரளா மற்றும் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்விச் சங்கம், கர்நாடகா ஆகியவை ஆகும்.

இவை குறித்து தேசிய அளவிலான ஆங்கில மற்றும் இந்தி நாளிதழ்களில், யுஜிசி சார்பில் எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலிப் பல்கலைக்கழகங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு மக்களவையில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x