புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.2.87 கோடி மதிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கருவி 

புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.2.87 கோடி மதிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பக் கருவி 
Updated on
1 min read

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நவீன ஊடு கதிர் மின் அணு நிறமாலைக் அளவீட்டுத் தொழில்நுட்பக் கருவி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மத்தியக் கருவிமயமாக்கல் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முனைவர் பட்ட மாணவர்கள் பல்வேறு நவீன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிகளை மேலும் ஊக்கப்படுத்துகின்ற வகையில் புதுவை பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பல்கலைக்கழக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டுத் திட்ட நிதி உதவியோடு ரூ.2.87 கோடி மதிப்பிலான நவீன ஊடு கதிர் மின் அணு நிறமாலைக் அளவீட்டுத் தொழில்நுட்பக் கருவி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆராய்ச்சி மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழா, மத்தியக் கருவி மயமாக்கல் மைய ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்தது.

மையத்தின் தலைவர் பேராசிரியர் பால.மணிமாறன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி காந்த் குமார் மற்றும் உயிர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் குர்மீத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கருவியை ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், "வேதியியல் பகுப்பாய்வுத் துறையில் பெரும் பயனைத் தரக்கூடிய புதிய நவீனத் தொழில்நுட்பக் கருவியைப் பயன்படுத்தி மாணவர்களும் பேராசிரியர்களும் உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி தனிமங்களின் காற்று நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதல் கண்டறிய முடியும். அதனால் வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் உயிரியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக்கொள்ள முயல வேண்டும். ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்பதால் மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சிக் கூடங்களில் ஆய்வுகளை ஆர்வத்தோடு செய்ய வேண்டும்" என்று குர்மீத் சிங் கேட்டுக் கொண்டார்.

விழாவில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆராய்ச்சித் துறை மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்தியக் கருவி மயமாக்கல் மையப் பேராசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in