Published : 28 Jul 2021 06:19 PM
Last Updated : 28 Jul 2021 06:19 PM

மதுரை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்த ஆலோசனை

மதுரை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஹெச்.சி.எல். உதவியுடன் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கல்விச் சூழலை வழங்க ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உதவியுடன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் சார்பில் ‘ஹேப்பி ஸ்கூல்’ என்ற திட்டம் செயல்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் இந்தத் திட்டம் செயல்படாமல் நின்றது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது.

கரோனா காலத்தில் குடும்பப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இணையம், தொலைக்காட்சி, செல்பேசிப் பயன்பாடுகளால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி, குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பு, கண் பார்வைக் குறைபாட்டுக்கு வாய்ப்பு மற்றும் கவனச்சிதறல்கள் போன்றவற்றால் மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறனும், மனநலனும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால், மாணவர்களின் உடல், மன, சமூகப் பழக்கவழக்கங்கள் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்புக் கவனம் செலுத்தி அதன்மூலம் கற்றல் சூழலை மேம்படுத்தி மகிழ்ச்சியான, நிறைவான கல்வியை வழங்க 'ஹேப்பி ஸ்கூல்' திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சியின் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் ஆணையர் கே.பி.கார்த்திகேயன் பேசுகையில், ‘‘இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மனநல ஆலோசகராகச் செயல்பட்டு ஒவ்வொரு மாணாக்கரின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணித்து அவர்களின் மனநலம், உடல் நலம், சமூகப் பழக்கவழக்கங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் பயிற்சிகளை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உதவியுடன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் வழங்கும். மாணாக்கர்கள் தமது கருத்துகளையும், கவலைகளையும் தெரிவிக்க ஆலோசனைப் பெட்டி மற்றும் தொலைபேசி ஆலோசனை மையம் செயல்படுத்தப்படும்.

கற்பனை மற்றும் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ணச்சுவர் ஏற்படுத்தப்பட்டு மாணாக்கர்கள் தமது திறனை வெளிப்படுத்த வழிவகை செய்யப்படும். மனநல ஆலோசனை செயல்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குத் தொலைபேசி மூலமும் வாரம் ஒருமுறை நேரிலும் தேர்ந்த மனநல ஆலோசகர்களால் விளக்கங்கள் அளிக்கப்படும். மாநகராட்சி மருத்துவர்கள் மூலம் மாணாக்கர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளும் ஒருவேளை கரோனா சூழலால் தொலைக்காட்சி மற்றும் இணையவழிக் கல்வி தொடரும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைகள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை தலைவர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், கல்வி அலுவலர் பொ.விஜயா, செல்லமுத்து அறக்கட்டளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வமணி, ஆராய்ச்சி இயக்குநர் எம்.கண்ணன், நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x