Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

கரோனா குறைந்ததும் கல்லூரி திறப்பு குறித்து முடிவு: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை

கரோனா தொற்று குறைந்தவுடன் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொறியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு நேற்றுதொடங்கியது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 24 வரைஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கரோனா தொற்று குறைந்தவுடன் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமான பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது உண்மை. அதனால், கூடுதலாக உள்ள பேராசிரியர்கள் இதர கல்லூரிகளுக்கு மாற்றப்படுகின்றனர். விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயரளவில்தான் இயங்கியது. முந்தையஅதிமுக அரசு அந்த பல்கலைக்கழகத்துக்கு ஒரு ரூபாய்கூட நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை. 4 பேரை நியமித்தால் பல்கலைக்கழகம் ஆகுமா?

அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்வித் துறையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்.

இந்திய அரசிலயமைப்பு சட்டத்தில் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பாடப் புத்தகங்களிலும் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் விண்ணப்பம்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுwww.tneaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது.

நேற்று மாலை 5.30 நிலவரப்படி, 25,611 பேர் விண்ணப்பித்தனர். அதில் 10,084 பேர் விண்ணப்பக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தினர். 5,363 பேர்உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x