Published : 23 Jul 2021 02:28 PM
Last Updated : 23 Jul 2021 02:28 PM

திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்ல்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள முத்துகலிங்கன் கிருஷ்ணன், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்படுகிறார். முத்துகலிங்கன் கிருஷ்ணன் பணியில் இணையும் நாளில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கோ அல்லது அவருக்கு 70 வயது ஆகும் வரையிலோ துணை வேந்தராக நீடிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 17-வது துணைவேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இவர், அதற்கு முன்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக கிருஷ்ணன் பணியாற்றியுள்ளார். லண்டனில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சிக் குழு, இந்தியாவின் அறிவியல், சுற்றுச்சூழலுக்கான சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

கடந்த 28 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அவரது 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) இதழ்களில் வெளியாகியுள்ளன. நுண் உயிரியல் துறையில் 2 நூல்களையும் முத்துகலிங்கன் கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x