Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

மாணவர்களிடையே ஆர்வம்; நீட் தேர்வுக்கு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது: இணையதளம் சிறிது நேரம் முடக்கம்

சென்னை

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று முதல் தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இதன்படி, 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக இந்தத் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதன்படி, https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் நேற்று மாலை 5 மணி முதல் தேர்வுக்கு விண்ணப்பிப் பது தொடங்கியது. ஆகஸ்ட் 6-ம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 7-ம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 8 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யலாம். ஆகஸ்ட் 20-ம் தேதி தேர்வு மையங்கள் அறிவிக்கப்படும். தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒரேநேரத்தில் செப்டம்பர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு முதல் பிஎஸ்சி (எச்) நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இந்தியா முழுவதும் 201 நகரங்களில் 3,862 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் காகிதம், பேனா கொண்டு எழுதும் முறையில் தேர்வு நடை பெறும்.

தமிழகத்தில் மட்டும் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இணையதளம் முடங்கியது

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்க முயன்றதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. மீண்டும் இணையதளம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்வமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x