பொருளாதார பாதிப்பால் தனியார் பள்ளிகளில் இருந்து விலகல்; அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வகுப்பறைகளுக்கு பற்றாக்குறையால் திணறல்

பொருளாதார பாதிப்பால் தனியார் பள்ளிகளில் இருந்து விலகல்; அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வகுப்பறைகளுக்கு பற்றாக்குறையால் திணறல்

Published on

கரோனா அலை ஏற்படுத்தியுள்ள பொருளாதார சரிவால், பெற்றோர் பலரும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

கரோனா 2-வது அலை ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்துவதில் சிரமம், 2 ஆண்டுகளாக வகுப்பறை கற்றல் இல்லாமல் செலுத்தப்பட்ட கட்டணம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவை பெற்றோர் மனநிலையில் மாற்றத்தை ஏற் படுத்தி உள்ளன.

தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 36 அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளி களில் மாணவர் சேர்க்கை வெகு வாக அதிகரித்துள்ளது.

பெரியகுளம் அருகே சில்வார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் 423 பேர் படித்தனர். இந்தக் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை திடீரென 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ஆசிரியர், மாணவர் விகிதம் 1:40 என்ற அளவைக் கடந்துள்ளதால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, அல்லிநகரம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சில்வார்பட்டி அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் மோகன் கூறியதாவது: அரசு பள்ளிகளில் மடிக்கணினி, சைக் கிள், புத்தகம், உள்ளிட்ட 14 வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. கல்விக் கட்டணமும் இல்லை. இது பெற்றோர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

இதை உணர்ந்த சில தனியார் பள்ளிகள், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்காமல் தாமதம் செய்து வருகின்றன. இருப்பினும் மாணவர்களின் பிறப்புச் சான்று, ஆதார் அட்டையை வைத்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

சில்வார்பட்டி அரசு பள்ளியில் கூடுதலாக 24 வகுப்பறைகள் தேவை. இதையடுத்து தலைமை ஆசிரியர் மோகன் தலைமையி லான ஆசிரியர்கள் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமாரிடம் கூடுதல் வகுப்பறை அமைத்து தரக்கோரி மனு அளித்தனர்.

உதவித் தலைமை ஆசிரியர் வெள்ளையன், ஆசிரியர் கள் வெங்கடேசன், செந்தில்குமார், பாலமுரளி உடனிருந்தனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in