

கோவிட் 19 காலகட்டத்தில் நோய் மீதான பயத்தால் 22% குழந்தைகளும் பதற்றத்தால் 41% குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர் ஷெலாஃபி குலாட்டி தலைமையில், 'பெருந்தொற்றுக் காலத்தில் ஊரடங்கின்போதும் தனிமைப்படுத்தப் பட்டபோதும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் உளவியல் மற்றும் நடத்தையில் ஏற்பட்ட தாக்கம்' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 22,296 குழந்தைகள் மற்றும் வயதுவந்தோர் பங்கேற்றனர். அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:
''குறைந்தபட்சம் 22.5 சதவீதக் குழந்தைகளிடம் கோவிட் 19 குறித்த பயம் ஏற்பட்டிருக்கிறது. எரிச்சல் மற்றும் கவனமின்மையால் 42.3% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நடத்தைகளில் பிரச்சினை உள்ள ஆட்சிசம், வேறு சில வகைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
2 வயதுக் குழந்தைகள் கூடத் தங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 34.5 சதவீதக் குழந்தைகளிடம் பதற்றம், கவலை, எரிச்சல், கவனமின்மை ஆகிய பிரச்சினைகளை கண்டுகொள்ள முடிகிறது. பதற்றத்தால் 41% குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் 35.2% மற்றும் 21.3% குழந்தைகள் முறையே சலிப்பு மற்றும் உறக்கத்தில் சிக்கலை எதிர்கொண்டனர்.
அதேபோல 52.3 சதவீதக் குழந்தை பராமரிப்பாளர்களும் 27.4 சதவீதப் பராமரிப்பாளர்களும் முறையே பதற்றம் மற்றும் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது இது நிகழ்ந்துள்ளது.''
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சார்ஸ், எபோலா உள்ளிட்ட பெருந்தொற்றுகளின்போது குழந்தைகளும் இளம் பருவத்தினரும் உளவியல் சிக்கல்களை அதிகம் எதிர்கொண்டது நினைவுகூரத்தக்கது.