

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இடம் பெறாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர்கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து வந்தனர்.
இதில், முந்தைய 9-ம் வகுப்புமதிப்பெண், கிரேடு முறையில் சான்றிதழ் உட்பட பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் இறுதி முடிவு எடுப்பதில் குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில்10-ம் வகுப்புக்கு மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நேரடி வகுப்புகள்கூட 2 மாதங்களேநடைபெற்றன. இதுதவிர, முந்தையஆண்டு 9-ம் வகுப்புக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டதால் இறுதி மதிப்பெண் கணக்கிடுவது பெரும் சிக்கலாக இருந்தது. எனவே, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் வழங்காமல், தேர்ச்சியை மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சான்றிதழில் மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். மதிப்பெண் இருக்காது.
பிளஸ் 1 சேர்க்கையில் மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவை வழங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு சான்றிதழ் வழங்குவதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த வடிவில் சான்றிதழ் தயாரித்துஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பிறகுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.