வானில் நிகழும் நிழல் விளையாட்டு: நாளை வளைய சூரிய கிரகணம்

வானில் நிகழும் நிழல் விளையாட்டு: நாளை வளைய சூரிய கிரகணம்
Updated on
2 min read

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 10-ம் தேதி (நாளை) நிகழவுள்ளது.

சூரியனின் ஒளியை நிலவு மறைக்கின்ற இந்த நிகழ்வு மூன்று வகையாக நிகழும். அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். நிலவானது சூரியனை முழுவதுமாக மறைப்பது முழு சூரிய கிரகணம். சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90% பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.

எங்கெல்லாம் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்?

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், கனடாவின் சில பகுதிகளில், கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சில பகுதிகள், வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும்.

எப்போது தெரியும்?

இந்த வளைய சூரிய கிரகணம் ஜூன் 10, 2021 இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது. குறிப்பாக நிலவானது சூரியனை வளைய வடிவில் மறைக்கின்ற அந்த முழு வளைய அமைப்பானது 3 நிமிடங்கள் 51 நொடிகள் தெரியவுள்ளது.

சூரிய கிரகணத்தை எவ்வாறு பார்க்கலாம்?

சூரியனை எக்காரணம் கொண்டும் நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரிய கிரகணத்தின்போது மட்டுமல்லாமல் எப்பொழுதுமே நாம் சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியும், சூரியனின் பிம்பத்தினை ஊசித்துளை கேமரா மூலம் விழச்செய்தும், இந்த சூரிய கிரகணத்தை உற்று நோக்கலாம்.

இந்த சூரிய கிரகணம் ஆனது வானில் நிகழ்கின்ற ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே. இந்த அரிய வானியல் நிகழ்வினை இந்தியாவில் நாம் உற்றுநோக்க முடியாது என்றாலும் இணையதளம் மூலமாக, ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். இதுபோன்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்றுநோக்கச் செய்யும்போது, வானியல் துறையில் ஏற்படுகின்ற பல்வேறு மாற்றங்களையும் அதில் ஈடுபாட்டையும் பள்ளி மாணவர்களிடையே நாம் வளர்க்க முடியும்.

- கண்ணபிரான்,

ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in