

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அவசரகால மருத்துவ உபகரணங்கள், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
திருமயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கோட்டாட்சியர் டெய்சிகுமார், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுவாச மருந்து புகை கருவி- நெபுலைசர், ஆக்சிஜன்ப்ளோமீட்டர், ஆக்சிஜன் நகர்வு உருளை தாங்கி, நோயாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், ரத்த அழுத்த அளவீட்டுக் கருவி, ஸ்டெத்தஸ்கோப், மருத்துவர்களுக்கான சிறப்புக் கையுறைகள், தலையணையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில சட்ட ஆலோசகர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், மாவட்ட செய்தித்தொடர்பாளர் ரகமதுல்லா, திருமயம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உமா ஜெயந்தி, முத்துலெட்சுமி, சரவணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாகப் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் நாயகம் அனைவரையும் வரவேற்றார். இறுதியாக வசந்த மலர் நன்றி கூறினார்.