

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது சிறப்பான மற்றும் மாணவர் நலன் சார்ந்த முடிவு என்று பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஜூன் 1-ம் தேதி மாலை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்தியக் கல்வியமைச்சர் பொக்ரியால் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு, பெட்ரோலியம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் செயலாளர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
எனினும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விமர்சனமும் கிளம்பி வருகிறது. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்தது குறித்துப் பாராட்டுத் தெரிவித்த ட்வீட்டுகளுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி,''மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம். நீங்கள் கூறியதுபோல தற்போதைய சூழலில் இந்த முடிவுதான் சிறப்பான மற்றும் மாணவர் நலன் சார்ந்த முடிவு'' என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் ஒருவரின் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி,''கடந்த ஆண்டில் ஆசிரியர் சமூகம் சிறந்த பங்காற்றி உள்ளது. புதிய இயல்பு வாழ்க்கையிலும் கல்விப் பயணத்தை உறுதி செய்து, மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.