Published : 01 Jun 2021 12:25 PM
Last Updated : 01 Jun 2021 12:25 PM

1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

2020- 21ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எந்த மாணவரையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் கீழ் எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவனையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சி அடைய வேண்டும். எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்துச் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு

கோவிட்-19 காரணமாக தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எனவே தளர்வுகள் இல்லாத ஊரடங்கு முடிவு பெற்ற பிறகு, பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.

மேலும், மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த உடன் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும்''.

இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x