கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: 3-வது மாநிலமாக அறிவித்தது டெல்லி 

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி: 3-வது மாநிலமாக அறிவித்தது டெல்லி 
Updated on
1 min read

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்திலும் தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், கரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டங்களை மத்தியப் பிரதேச அரசு நேற்று அறிவித்தது.

குறிப்பாக, ''கரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும். அத்துடன் மாதாமாதம் ரூ.5,000 ஓய்வூதியமும் இலவச ரேஷனும் வழங்கப்படும்'' என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவிட்-19 தொற்றால் நிறையக் குழந்தைகள் பெற்றோரை இழந்திருக்கின்றனர். அவர்களின் வலியை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. கவலைப்பட வேண்டாம். அவர்களின் கல்வி தடைப்பட நாங்கள் விடமாட்டோம்’’ என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் குறைவான புதிய கோவிட் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in