12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
Updated on
1 min read

12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் கலந்துகொண்ட பின்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ''கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் அறிகுறி இல்லாமலேயே இருக்கின்றனர். அதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

முடிந்தவரை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும். பிற மாநிலங்களில் தேர்வு நடத்தப்படும் சூழலையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால், தமிழகத்தில் சூழல் அப்படி இல்லை. செய்முறைத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாளும் இதுகுறித்துப் பேச உள்ளோம். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை, கருத்துகளை முதல்வரிடம் எடுத்துச் செல்ல உள்ளேன். அவர் உரிய முடிவெடுத்து அறிவிப்பார்.

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களைப் பொறுத்தவரை முந்தைய தேர்வுகள், அகமதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கலாமா என்று யோசிக்கப்பட்டு வருகிறது அதற்கு மிக விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in