Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

6 நாட்களில் 1330 திருக்குறளை ஐஸ் குச்சியில் எழுதிய நாச்சிக்குப்பம் அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ள கிராமம் நாச்சிக்குப்பம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 190-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கரோனா தொற்று பரவாமல் தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், ஆசிரியைகள் மட்டும் பள்ளிகளுக்குச் சென்று காணொலி மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் நாச்சிக்குப்பம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை கண்டறிந்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

இப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் கத்தரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா, தமிழ் மொழியை ஆர்வமுடன் கற்று வருவதால், அவரது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் முயற்சி எடுத்தார். இதற்காக 133 அதிகாரங்கள் கொண்ட 1330 திருக்குறள்களை ஐஸ் குச்சியில் எழுதி சாதனை படைக்க திட்டமிட்டு, ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அவருக்கு தேவை யான உதவிகளை ஆசிரியர்கள் செய்தனர்.

இதனை தொடர்ந்து மாணவி கீர்த்தனா, 6 நாட்களில் 1330 திருக்குறளையும் ஐஸ் குச்சியில் எழுதி முடித்தார். மாணவியின் இந்த முயற்சியை ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.

இதேபோல், இப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் சின்னதம்மாண்டரப் ப ள்ளியைச் சேர்ந்த மாணவன் சிவமணி, தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களின் தலைமை பெயர்களை, 3 நிமிடங்களில் வாசித்து காண்பித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளுக்கு பள்ளியின் தலைமை யாசிரியர் விஜயா, பட்டதாரி ஆசிரியர் கண்டா, ஆசிரியர் சகாதேவன் ஆகியோர் ஊக்கம் அளித்து வருவதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x