Published : 19 Apr 2021 07:36 PM
Last Updated : 19 Apr 2021 07:36 PM

கரோனாவுக்கு நடுவே கேரளாவில் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள்; 3 அடுக்கு முகக்கவசத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தல்

கேரள மாநிலத்தில் கடுமையாக சுகாதார நடைமுறைகள் மற்றும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மூன்று அடுக்கு முகக் கவசத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் தள்ளி வைத்தது.

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களும் பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தன.

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ஒத்தி வைத்தது. தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் செய்முறைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு (இண்டர்) பொதுத் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடைபெறும் என்று அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள மாநிலத்தில் கடுமையாக சுகாதார நடைமுறைகள் மற்றும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மூன்று அடுக்கு முகக்கவசத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே மாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாகத் தேர்வு எழுத பள்ளி அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கைகழுவும் திரவம், கிருமிநாசினி திரவம் ஆகியவை வைக்கப்பட வேண்டும், இவற்றைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று அம்மாநில பள்ளிக் கல்வி தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 8-ம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஏப்ரல் 29-ம் தேதி வரை 10-ம் வகுப்புத் தேர்வும் ஏப்ரல் 26-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வும் நடைபெறுவதாக இருந்த நிலையில், பொதுத் தேர்தல் காரணமாகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த ஆண்டு கரோனா தொற்றுக்கு மத்தியில் கேரளாவில் பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெற்று, ஜூன் மாதத்தில் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x