Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு: சென்னையில் தமிழக அரசு பயிற்சி மையம் ஏற்பாடு

சென்னை

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஏப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறைத் தலைவரும், அண்ணா மேலாண்மை நிலையத்தின் டைரக்டர் ஜெனரலுமான வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் அகிலஇந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் ஏழை மாணவர்களுக்கு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு மற்றும் மெயின் தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற மெயின் தேர்வில் அரசு மையத்தில் படித்த 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக டெல்லியில் ஆளுமைத் தேர்வு நடத்தப்படும்.

மெயின் தேர்வு மதிப்பெண், ஆளுமைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெற்றி தீர்மானிக் கப்படுவதால் ஆளுமைத் தேர்வுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த வகையில், அரசு மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமின்றி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து தமிழக மாணவர்களுக்கும் மாதிரிஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு ஏப்ரல் 8 மற்றும் 9-ம் தேதியில் சென்னையில் நடைபெறும்.

இந்த மாதிரி தேர்வை 6 குழுக்கள் நடத்த உள்ளன. ஒவ்வொருகுழுவிலும் தலைமைச் செயலர்நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றியவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல்மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை துல்லியமாக ஆய்வு செய்யும் உளவியல் நிபுணர்கள் இடம்பெறுவர்.

தலைமைப் பண்பு, அறிவாற்றல்

இந்த மாதிரி தேர்வில் ஆளுமைத் தோற்றம், தலைமைப் பண்பு, அறிவாற்றல், தகவல் பரிமாற்றம், உடல்மொழி, அறநெறி உள்ளிட்ட 10 பண்புகள் கூர்ந்து ஆய்வு செய்யப்பட்டு மதிப்பெண் அளிக்கப்படும். மாதிரி தேர்வு முடிவடைந்ததும் தேர்வர்கள் செயல்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி, எப்படியெல்லாம் இன்னும் தங்களை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்படும்.

மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு வருவோருக்கு அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே மதிய உணவு வழங்கப்படும். அவர்களின் செயல்பாடு குறித்த அறிக்கையின் நகலும் வழங்கப்படும். மேலும், ஆளுமைத் தேர்வில்கலந்துகொள்ள ஊக்கத்தொகை யாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல்விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனவே, மெயின் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை (சுயவிவரக் குறிப்பு மற்றும் புகைப்படத்துடன்) அரசு பயிற்சி மையத்தின் முதல்வருக்கு aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ ஏப். 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x