Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு திறனறிவுத் தேர்வு விரைவில் நடத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்

நாடு முழுவதும் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு திறனறிவுத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விதிகள் அடங்கிய புதிய வழிகாட்டு கையேடு புத்தகத்தை (2021-22) அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சமீபத்தில் வெளியிட்டது. இதில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதுதொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே பேசிய தாவது:

நம்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான, தரமான கல்வியை வழங்க தேசிய கல்விக் கொள்கை-2020 (என்இபி) வழிவகை செய்துள்ளது. அதன்படி, பன்முகத் தன்மை கூடிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி, ஒரே நேரத்தில் பல பட்டங்களை மாணவர்கள் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியும். இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ளவும், ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வியையும் தாய்மொழியில் கற்கவேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ‘நாக்’ அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி பள்ளிக் கல்வியானது தற்போதைய 10 2 என்ற வழிமுறை 5 3 3 4 என்ற வடிவில் மாற்றப்படும். அதாவது, பள்ளிக்கல்வி முன் பருவக்கல்வி (எல்கேஜி முதல் 2-ம் வகுப்பு வரை), தொடக்கக்கல்வி (3-5), நடுநிலைக்கல்வி (6-8), மேல்நிலைக்கல்வி (9-12) என 4 நிலைகளாக பிரிக்கப்படும்.

இதன்மூலம் 14 வயதிலேயே தாங்கள் என்னவாக வேண்டும் என்று மாணவர்களால் முடிவு எடுக்க முடியும். தற்போது பொறியியல் படிக்கும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் கட்டாயத்தின் அடிப்படையில்தான் படித்து வருகிறார்கள். இந்த முறை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படும். அதாவது, 10, 12-ம்வகுப்பில் இயற்பியல், வணிகவியல் என எந்த பாடங்களையும் மாணவர்கள் விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம்.

அதில் ஒரு பாடத்தை தொடர முடியாமல் போனாலும், அதை விட்டுவிட்டு வேறு பாடத்தை எடுத்துபடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பொறியியல் சேர்க்கை பெறும்போது கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ஏனெனில், 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் படிக்கவில்லை என்றாலும் முதலாம் ஆண்டில் கணிதம் படிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, 12-ம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காத மாணவர்கள் பிஎஸ்சி உயிரியல் எடுக்கும் வாய்ப்பு30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதேபோல், பி.காம், பிஏ,பிசிஏ உள்ளிட்ட அனைத்து கலை, அறிவியல் படிப்புகளிலும் இந்நிலை உள்ளது. இந்த நடைமுறைதான் பொறியியல் படிப்பிலும் பின்பற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்கல்வி பயிலஎந்த நுழைவுத் தேர்வும் இல்லாததால் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற அடிப்படைப் பாடங்களின் மதிப்பெண்களை வைத்தேஉயர்கல்வி சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கைக்கு விரைவில் திறனறிவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திறனறிவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்படும்.

அதேபோல், மருத்துவம், சட்டம்,பொறியியல், கலை, அறிவியல் எனஅனைத்து தரப்பு படிப்புகளுக்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன.இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலமே, கல்வி பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் விஐடி பல்கலை. துணைத்தலைவர் வி.செல்வம், அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலை. வேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் தலைவர் எஸ்.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x