Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

ஐஐடி, என்ஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தொடங்கியது

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு நேற்று தொடங்கியது.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு மெயின், அட்வான்ஸ்டு என இரு தேர்வுகளை உள்ளடக்கியது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வெழுதலாம். ஐஐடி மாணவர் சேர்க்கை ஜெஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகின்றன. 2021-ம் ஆண்டில் ஜெஇஇ மெயின் தேர்வு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 தடவைகள் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. மாணவர்கள் விரும்பினால் 4 தேர்வுகளிலும் கலந்துகொள்ளலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அதைப் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்குரிய தேர்வு நடத்தப்பட்டு மார்ச் 8-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. மார்ச் மாதத்துக்கான ஜெஇஇ மெயின் தேர்வு மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என என்டிஏ அறிவித்தது. அதன்படி, மார்ச் ஜெஇஇ மெயின் தேர்வு இந்தியா முழுவதும் நேற்று தொடங்கியது. சென்னை உட்பட நாடு முழுவதும் 331 முக்கிய நகரங்களில் இணையவழியில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு 6 லட்சத்து 19 ஆயிரத்து 776 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிப்ட் தேர்வும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 2-வது ஷிப்ட் தேர்வும் நடைபெற்றன. பிப்ரவரி மாத தேர்வுடன் ஒப்பிடும்போது கணித வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வேதியியல் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். மெயின் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத் தேர்வை தொடர்ந்து, 3-வது ஜெஇஇ மெயின் தேர்வு ஏப்ரல் 27 முதல் 38 வரையிலும்,4-வது தேர்வு மே 24 முதல் 28 வரையிலும் நடைபெறும் என என்டிஏ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x