Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

இயற்கை மருத்துவம், யோகா படிப்பில் சேர 11-ம் தேதி 3-வது கட்ட நேரடி கலந்தாய்வு : புதிதாக விண்ணப்பித்தும் பங்கேற்கலாம்

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா படிப்பில் காலியாகவுள்ள 597 காலியிடங்களை நிரப்புவதற்காக 3-வது கட்ட நேரடி கலந்தாய்வு சென்னையில் வரும் 11-ம்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் புதிதாக விண்ணப்பித்தும் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இயற்கை மற்றும் யோகாமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு அரசு கல்லூரி மற்றும் பல்வேறு சுயநிதி கல்லூரிகளில் 597 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான 3-ம் கட்ட நேரடி கலந்தாய்வு வரும் 11-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தின் தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

முதல் 2 கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.500-ஐ சேர்த்து கலந்தாய்வு நடைபெறும் 11-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தேர்வுக்குழு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு கலந்தாய்வுக்கான மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வுநடத்தப்படும். தகுதியுள்ள மாணவர்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வு கட்டணம் ரூ.500, கல்விக்கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற பின் மார்ச் 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x