

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு இன்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கத் தொடங்கின. மாணவ, மாணவிகளுக்குப் பால் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார்.
கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கும் வகையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்துப் பள்ளிகள் செயல்பட்டன. 1, 3, 5, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் இன்று முதல் முழு நேரமும் செயல்படும் என்றும் வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12-ம் வகுப்புகள் வரை அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கின.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் வழங்கும் திட்டம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த திட்டம் செயல்படும் என தெரிவித்திருந்தார் அதன்படி நேற்று முதல் பால் விநியோகம் தொடங்கியது.
இன்று காலை சவுரிராயலு அரசு ஆரம்பப் பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பால் வழங்குவதை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். அவருடன் மத்திய உள்துறை நியமித்த ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி ஆகியோரும் வந்திருந்தனர்.
குழந்தைகளுடன் கலந்துரையாடிய பின்பு தமிழிசை செய்தியாளர்களிடம் கூறும்போது, பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மதிய உணவுத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் காலையில் குழந்தைகளுக்குப் பால் தரும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுவது குழந்தைகளின் நலனுக்கு உகந்தது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.