

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு 9-ம்வகுப்பு முழு ஆண்டுத் தேர்வும், 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதையடுத்து 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என பல்வேறு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
கற்றல் குறைபாடு ஏற்பட வாய்ப்பு
9, 10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும். நடப்புஆண்டுக்கான பாடங்களை நடத்தாவிட்டால் அடுத்த ஆண்டுக்கான கல்வி பாதிக்கப்படும். இதனால் கற்றல் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதுதவிர மாணவர்கள் தேர்ச்சிக்கு வருகைப்பதிவும் கணக்கில் கொள்ளப்படும். எனவே, மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு ரத்து அறிவிப்பு சிபிஎஸ்இஉட்பட இதர பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்து பொதுத்தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு வழக்கம்போல் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்’’ என்றார்.