அங்கன்வாடிகளில் இனி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள்- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவு

அங்கன்வாடிகளில் இனி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள்- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவு
Updated on
1 min read

புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களில் உள்ள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வாராவாரம் 3 முட்டைகள் தர வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை மத்திய அரசு நீக்கிவிட்டு தமிழிசையை அப்பொறுப்புக்கு நியமித்தது. அதுமுதல் தொடர் ஆய்வுகளையும், அதற்கான நடவடிக்கைகளையும் தமிழிசை எடுக்கத் தொடங்கியுள்ளார்.

அண்மையில் அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு செய்த தமிழிசை அதுதொடர்பாக இன்று பிறப்பித்த உத்தரவு:

"மத்திய அரசு நிதி உதவியுடன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது. அக்குழந்தைகளின் புரதச் சத்துத் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது.

இனி வாரம் மூன்று முட்டைகள் தர உத்தரவிடப்படுகிறது. அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதனால் 28 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். இதற்காகப் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.68 கோடி கூடுதல் செலவாகும்."

இவ்வாறு ஆளுநர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in