

காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் உள்ள புதுச்சேரி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வளாக நேர்காணலில் ஆண்டுதோறும் 70% மாணவர்களுக்கு வேலை கிடைப்பதாக அதன் இயக்குநர் முனைவர் கே.சங்கரநாராயணசாமி கூறியுள்ளார்.
காரைக்காலில் உள்ள என்ஐடியின் 7-வது பட்டமளிப்பு விழா நாளை (பிப்.19) மாலை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் முனைவர் கே.சங்கரநாராயணசாமி இன்று காரைக்காலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''என்ஐடி பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் இணைய வழியில் நடைபெறுகிறது. மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் ஜி.சதீஷ்ரெட்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசுகிறார்.
இதில் 97 பேர் இளநிலை, 24 பேர் முதுநிலை, 4 பேர் முனைவர் பட்டம் என 125 பேர் பட்டம் பெறுகின்றனர். என்ஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 54 பேர் பங்கேற்றுப் பட்டம் பெறுகின்றனர். மற்றவர்கள் அவரவர் இருக்கும் இடங்களிலிருந்து பட்டம் பெறுகின்றனர். என்ஐடி வளாகத்தில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆய்வகங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட வளாகம் திறக்கப்படுகிறது.
2018-ம் ஆண்டுக்குப் பின் இந்நிறுவனம் பல நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே ரூ.300 கோடியில் முதல் கட்டமாக பல்வேறு கட்டமைப்புகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.300 கோடியில் அடுத்தகட்டமாக மாணவ மாணவிகளுக்கான விடுதிகள், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை உள்ளடக்கிய பென்டகன் வடிவிலான கட்டிடம் கட்டப்படவுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும்.
காரைக்காலில் உள்ள புதுச்சேரி என்ஐடி தர வரிசையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. நாட்டின் பல்வேறு பெரிய நிறுவனங்கள் இங்கு வந்து வளாக நேர்காணல் நடத்துகின்றன. ஆண்டுதோறும் சுமார் 70 சதவீத மாணவர்கள் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
மீனவர்கள் பயன்பாட்டுக்காக என்ஐடி மூலம் சூரிய சக்தியில் மீன் உலர்த்தும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் மீனவர்களிடையே இது தொடர்பான ஆர்வம் குறைவாக உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டால் சுகாதாரமான முறையில் மீன்களை உலர்த்த முடியும்''.
இவ்வாறு என்ஐடி இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி தெரிவித்தார்.