Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

முதல்முறையாக வயது வரம்பு நிர்ணயம்; முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஜூன் 26, 27-ல் தேர்வு: மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை

அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு ஜூன் 26, 27-ம் தேதிகளில் ஆன்லைனில் நடைபெறும். இதற்கு மார்ச் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலைபட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துதேர்வு ஆன்லைனில் ஜூன் 26, 27-ம்தேதிகளில் நடக்க உள்ளது. இதற்குஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் (www.trb.tn.nic.in) மூலம் மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை படிப்புடன், பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40.இடஒதுக்கீடு பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, பிசி, பிசி-முஸ்லிம்,எம்பிசி), அனைத்து வகுப்பைசேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 45 ஆகும்.

காலி இடங்களில் 30 சதவீதம்பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த காலி இடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில்படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, இளங்கலை, முதுகலை, பிஎட் ஆகிய அனைத்து கல்வித் தகுதிகளையும் தமிழ்வழியில் பெற்றிருக்க வேண்டும். (ஏற்கெனவே முதுகலை, பிஎட் படிப்புகளை மட்டும் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும் என இருந்தது).

விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண். சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 கேள்விகள், கல்வி உளவியலில் இருந்து30 கேள்விகள், பொது அறிவுப்பகுதியில் இருந்து 10 கேள்விகள்என மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். கூடுதல் விவரங்களைஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.எட். பட்டதாரிகள் கோரிக்கை

ஆசிரியர் பணிக்கு இதுவரை வயது வரம்பு இல்லாமல் இருந்தது. தற்போது முதல்முறையாக வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், 40 வயதை கடந்த பொதுப் பிரிவினரும், 45 வயதை தாண்டிய இடஒதுக்கீடு பிரிவினரும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ‘வயது வரம்பு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் இந்த ஒருமுறையாவது தேர்வு எழுத வாய்ப்பு தரவேண்டும்’ என்று, வயது வரம்பை கடந்த பிஎட் பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x