சென்னையில் வரும் 12-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னையில் வரும் 12-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் கொ.வீர ராகவ ராவ் இன்று (பிப். 09) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது 'வேலைவாய்ப்பு வெள்ளி'-யாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 12.02.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் 30-வயதுக்கு உட்பட்ட 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை, அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது".

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in