10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசப் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: ஒடிசாவில் அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசப் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: ஒடிசாவில் அறிவிப்பு
Updated on
1 min read

கரோனா பரவலை முன்னிட்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு வழிகாட்டி நூல் இலவசமாக வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நூல் பொதுத்தேர்வு எழுதும் 6,20,508 மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.ஆர்.தாஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பரிக்‌ஷா தர்பான் (தேர்வு வழிகாட்டி) நூலை அரசு அளிக்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 6,20,508 மாணவர்களுக்கும் நூலை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

பரிக்‌ஷா தர்பான் நூல், 700 பக்கங்களுடன் கேள்வி - பதில்களை உள்ளடக்கியதாகவும் மாணவர்கள் தங்களின் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள உதவியாகவும் இருக்கும். கரோனா காலத்தில் மாணவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தலின் பேரில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீதப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்க உள்ளது. பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 13-ம் தேதி பொதுத் தேர்வுகளுக்கான கட்டணம் அனைத்தையும் ஒடிசா அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியானது.

பொதுத்தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரும் ரூ.420 செலுத்தி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அளிக்க வேண்டிய கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.27 கோடியை மாநில அரசே ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in