

தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும், பள்ளிகள் திறக்கப்படாமலே இருந்தது. பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். பெரும்பாலானோர் பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் விருப்பப்படி, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அத்துடன் பள்ளிகள் திறக்கப்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. எக்காரணம் கொண்டும் மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பத்தின் பேரில் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்றும், தூய்மைப் பணிகள், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை அதிகாரிகள் கொண்ட குழு 18-ம் தேதி ஆய்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் நேற்று காலை 9.30 மணிக்கு பணிக்கு வந்தனர். மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே விடக்கூடாது. மாணவர்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் பேருந்து பயணத்தைகுறைத்து சைக்கிளில் வருமாறுஊக்குவிக்க வேண்டும். எந்த மாணவரையும் பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் தினமும் நுழைவு வாயிலில் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். இறைவணக்கம், விளையாட்டுப் பயிற்சி உள்ளிட்ட இதர வகுப்புகள் இருக்காது. மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி வளாகத்திலும், வகுப்பறையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் வீட்டில் இருந்து குடிநீர், உணவு எடுத்துவர வேண்டும். ஒருவருக்கொருவர் கைகுலுக்குதல், தொட்டுப்பேசுதல் கூடாது என வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஷெனாய் நகர் திருவிக நகர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பள்ளிகளில் ஒருசில நாட்களுக்கு வகுப்புகள் ஏதும் நடத்தப்படாது. மாணவர்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்படும்.
பொதுத்தேர்வுகளுக்கு எவ்வித பதற்றமும் இல்லாமல் தைரியத்தோடு தயாராகுமாறு ஆசிரியர்கள் ஊக்கம் அளிப்பார்கள். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை வழங்கப்படும். மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு வாரத்தில் மருத்துவக் குழு செல்லும்’’ என்றார்.