Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 08:16 AM
அமெரிக்க ராணுவத்தின் முதல் தலைமை தகவல் அலுவலராக திருச்சி என்ஐடி பட்டதாரியான ராஜ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி என்ஐடியின் முன்னாள் மாணவரான ராஜ் ஐயர் அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த இவர் 1988-1992-ம் ஆண்டுகளில் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (தற்போது என்ஐடி) மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பின்னர், உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று அங்கு 25 ஆண்டுகள் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் பணியாற்றாத ஒருவரை முதன்முறையாக அமெரிக்க ராணுவம் தற்போது 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரலாக நியமித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறும்போது, ‘‘இவரது முன்னேற்றத்தைக் கண்டு திருச்சி என்ஐடி பெருமை கொள்கிறது. இவரது வாழ்க்கை என்ஐடியில் பயிலும் மாணவர்களின் கனவுகளை தொடர பெரும் ஊக்கமளிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!