Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

இந்திய அறிவியல் அமைப்பை போற்றும் விதமாக கரக்பூர் ஐஐடி சார்பில் நேரு அறிவியல், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் 2021-ம் ஆண்டு நாள்காட்டி

சென்னை

கே.சுந்தர்ராமன் / சி.பிரதாப்

இந்தியாவில் பொறியியல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் முதன்முதலில் 1951-ம் ஆண்டு மேற்குவங்கத்தின் கரக்பூர் நகரில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) தொடங்கப்பட்டது. அதன்பிறகு மும்பை, சென்னை, டெல்லி, வாராணசி உள்ளிட்ட இடங்களில் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன.

ஐஐடியில் கலாச்சாரம், விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களையும் மாணவர்கள் கற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஒவ்வொரு ஐஐடி கிளையிலும் கலாச்சார, தொழில்நுட்ப திருவிழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்திய கலாச்சாரத்தைப் போற்றும் வண்ணம் ஐஐடி கரக்பூர் கிளையில்இயங்கும் நேரு அறிவியல், தொழில்நுட்பஅருங்காட்சியகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினருக்காக நாள்காட்டி தயாரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் அறிவியல் முன்னோடிகளைப் போற்றும்விதமாக இந்திய அறிவியல் அமைப்பு நாள்காட்டி-2021 (ஐகேஎஸ் – இண்டியன் நாலெஜ் சிஸ்டம்ஸ்) தயாரிக்கப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத மொழியின் சிறப்புகளை விளக்கும் விதமாகவும் அறிவியல், அண்டவியல், வானியல், ஜோதிடம், ஆயுர்வேதம், கணிதம், வாஸ்து சாஸ்திரம், பொருளாதாரம் (அர்த்த சாஸ்திரம்) வேதியியல் (ரசாயனம்), சுற்றுச்சூழல் (பிரக்ருதி வித்யா) போன்ற துறைகளின் முன்னோடிகளான சப்தரிஷிகள், விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் குறித்ததகவல்கள், அறிஞர்களின் மேற்கோள்கள், இதிகாசம், புராணம், வேதம், உபநிடதங்களின் சாராம்சங்களுடன் இந்த நாள்காட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆதிகால சப்தரிஷிகளான காஷ்யபர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், வசிட்டர், விஸ்வாமித்திரர், அத்ரி மகரிஷிகள் வேதத்தை பாதுகாத்து வந்தனர். ஆசிய, ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னோடியாக சம்ஸ்கிருதம் உள்ளது என்றும், அனைத்து நாடுகளுக்கும் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றின் முன்னோடியாக இந்தியா உள்ளதுஎன்றும் உலக வரலாற்று ஆசிரியர் வில்துரந்த் கூறியுள்ளார் என்பன போன்ற தகவல்கள் நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், தற்கால இந்திய அறிவியல் நிபுணர்களான (சப்தரிஷிகள்) ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திரராய் (வேதியியல்), ஆச்சார்ய ஜெகதீஷ் சந்திர போஸ் (உயிரியல்) ஆச்சார்ய சீனிவாச ராமானுஜன் (கணிதம்), ஆச்சார்ய சத்யேந்திர நாத் போஸ் (இயற்பியல்), ஆச்சார்ய அசீமா சாட்டர்ஜி (கரிம வேதியியல்), ஆச்சார்ய ஈ.கே.ஜானகி அம்மாள் (தாவரவியல்), ஆச்சார்ய ஐராவதி கார்வே (சமூகவியல்) ஆகியோர் குறித்த தகவல்களும் இந்த நாள்காட்டியில் குறிப் பிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நேரு அறிவியல், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜாய் சென் கூறியதாவது: நம்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி கட்டுரைகள், சிறு நூல்கள் உட்படபல்வேறு செயல்பாடுகள் எங்கள் அருங்காட்சியகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 40 முதல் 45 பேர் கொண்டபிரத்யேக குழு அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு சம்ஸ்கிருத மொழியின் சிறப்புகளை விளக்கும் வகையில் வருடாந்திர நாள்காட்டி தயாரிக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவெளி பயன்பாட்டுக்காக டிஜிட்டல் வடிவ நாள்காட்டி இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க, ஐரோப்பிய பகுதிகள் என உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதை நேரு அருங்காட்சியகத்தின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த பலனாகக் கருதுகிறோம். ஐகேஎஸ் நாள்காட்டியை விற்பனை நோக்கத்தில் வடிவமைக்கவில்லை. மேலும்,இந்த நாள்காட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவே www.nehrumuseumiitkgp.org, indembassyuae.gov.in இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை அறிய அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி (nmst@hijli.iitkgp.ernet.in) மற்றும் தொலைபேசி எண் (03222–281040) வழியாக தொடர்பு கொள்ளலாம். இந்திய அறிவியல் அமைப்பு குறித்து ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக இந்த நாள்காட்டி வடிவமைக்கும் எண்ணம் உருவானது.

அடுத்தகட்டமாக சம்ஸ்கிருதத்துக்கு முன்னோடியான தமிழ் உள்ளிட்ட பழமையான தென்னிந்திய மொழிகளைப் பற்றிய சிறப்பிதழ்களை கல்வி பயன்பாட்டுக்காக வெளியிடும் திட்டம் உள்ளது. அதேபோல், கரக்பூர்ஐஐடியில் இந்திய பாரம்பரிய அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான கண்காட்சி அரங்கமும் அமைக்கப்படும்.

இத்தகைய முயற்சிகள் நமது அறிவியல்அமைப்பு தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கும். இந்தியகலாச்சாரம், பண்பாடு குறித்த ஆர்வத்தையும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கையில் நம் பழங்கால அறிவியல் அமைப்பு தொடர்பாக மாணவர்கள் பயில்வதற்கு உயர்கல்வி நிறுவனங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x