Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க தடை விதிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க அனுமதிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி, அரசு உதவி பெறும் சுயநிதி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.

விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 2900 தனியார் பள்ளிகளுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 288 பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணம் செலுத்த ரூ.16 கோடி சுழல் நிதி ஏற்படுத்தி, அதன்மூலம் அரசு கட்டணத்தை செலுத்துகிறது.

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை அறிந்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்.

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க அனுமதிக்காத பள்ளிகள் குறித்து எங்கள் கவனத்திற்கு வந்ததும், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி, பள்ளிகள் செயல்படுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக கட்டணம் வசூலிப்பதாக 16 பள்ளிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களுக்கே திருப்பி செலுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x