கேரளாவில் பொதுத் தேர்வுகள்: 10, 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 17 முதல் தொடக்கம்

கேரளாவில் பொதுத் தேர்வுகள்: 10, 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 17 முதல் தொடக்கம்
Updated on
1 min read

கேரளாவில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் உலகம் முழுவதும் மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கற்பித்து வருகின்றன.

கேரள மாநிலத்திலும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைச்சர்கள் கே.கே.ஷைலஜா, சி.ரவீந்திரநாத், ஜலீல், சுனில்குமார், மெர்சிக்குட்டி அம்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி முடிவடைகின்றன. தேர்வின்போது கோவிட் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். தொழிற்கல்விப் பிரிவுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளும்.

தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். மன அழுத்தத்தைத் தவிர்க்கப் பள்ளி அளவில் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோரின் அனுமதியோடு பள்ளிக்கு வரலாம்.

கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள், வேளாண் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழக வகுப்புகள் ஜனவரியில் தொடங்கப்படும். எனினும் குறைந்த அளவு மாணவர்களே அனுமதிக்கப்படுவர். இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகளைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in