Last Updated : 17 Dec, 2020 12:02 PM

 

Published : 17 Dec 2020 12:02 PM
Last Updated : 17 Dec 2020 12:02 PM

அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள் இல்லை; அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கீடு இல்லை: புதுவையில் டிச.31-க்குள் கலந்தாய்வை முடிக்க ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெறும் நடைமுறை இல்லை, அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பத்து சதவீத உள் ஒதுக்கீடும் நடைமுறைக்கு வராது என்பது உறுதியாகியுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி முடிக்கத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகிவிட்டன. இதனால் இங்கு அரசு இடங்களைப் பெற முடியாது. மீதமுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுச்சேரி அரசு பெற வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுதோறும் எழுப்பப்படும்.

அரசுத் தரப்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும், ஆனால் இதுவரை 50 சதவீத இடங்கள் பெறப்படவில்லை. நடப்பாண்டு கோரிக்கை வலுத்ததால் இதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு ஆளுநர் கிரண்பேடியிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் உள்துறைக்கு அனுப்பி விட்டார்.

ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் பத்து சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான கோப்பையும் உள்துறைக்குக் கிரண்பேடி அனுப்பிவிட்டார். அதன்பின்னர், ஆளுநர் கிரண்பேடி, "50 சதவீத இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெறத் தனிச் சட்டம் தேவையில்லை. கல்லூரி தொடங்கும்போதே அரசிடம் 50 சத இடங்களைத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி மாணவ, மாணவியர் 7 பேர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்குத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால் இந்த மனு தள்ளுபடியாகியுள்ளது.

இதையடுத்து புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெறுவது, அரசுப் பள்ளிகளில் படித்தோருக்குப் பத்து சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் ராஜ்நிவாஸில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வினி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பர் 2 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படித்தோருக்குப் பத்து சத இட ஒதுக்கீடு ஆகிய விவரங்கள் சென்டாக் கையேட்டில் குறிப்பிடவில்லை. அமைச்சரவைக் கொள்கை முடிவுகு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் மூன்று கட்டக் கலந்தாய்வை வரும் 31-ம் தேதிக்குள் சென்டாக் முடிக்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவக் கலந்தாய்வு நடத்தி முடிக்க 15 நாட்களே உள்ளதாகக் குறிப்பிட்டு இச்சேர்க்கையை விரைந்து முடிக்கச் சுகாதாரத் துறைக்கு கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், "சுகாதாரத்துறையானது மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்டாக் செயல்பட வேண்டும். 2020-21 சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையின்படியே அரசு ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு ஆகியவை இடம்பெறவேண்டும். சென்டாக் எவ்விதத் தாமதமுமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி, டிசம்பர் 31-க்குள் நிறைவு செய்ய வேண்டும்.

மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்குப் பெறும் கோப்பு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு கோப்பு ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெறப் புதுச்சேரி நிர்வாகம் தொடர்ந்து முயல வேண்டும். மருத்துவக் கட்டணம் கடந்தாண்டு நிர்ணயித்ததே தொடரும். வருங்காலங்களில் அரசு அனுமதி தந்த பிறகே சென்டாக் கையேடு பிரசுரிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நடப்பாண்டு புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இடங்களைப் பெறுவதும், அரசுப் பள்ளியில் படித்தோருக்கு பத்து சதவீத இடங்களைப் பெறுவதும் நடைமுறைக்கு வராது என்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x