அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து; தனியார் பள்ளிகளில் விருப்பத்துக்கேற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து; தனியார் பள்ளிகளில் விருப்பத்துக்கேற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
Updated on
1 min read

அரசு மற்று அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தெரியாததால் அரையாண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் குறித்துக் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.4 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, பால் உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டிடப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் தங்களின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம். தேவையெனில் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''எல்லாப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதல் கழிப்பறை தேவைப்படுகிறது.

முன்னதாக, கிராமப்புறங்களில் பள்ளிகள் கட்டப்பட்டபோது வளாகங்களில் இருந்து வெளியே கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in