Published : 04 Dec 2020 01:30 PM
Last Updated : 04 Dec 2020 01:30 PM

ரூ.7.4 கோடி; பெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேசப் பரிசு

பெண் கல்வியை ஊக்கப்படுத்திய இந்தியப் பள்ளி ஆசிரியருக்கு சர்வதேச ஆசிரியர் பரிசாக ரூ.7.4 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆச்சரியமூட்டும் விதமாகப் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான 10 போட்டியாளர்களிடமும் சமமாகப் பகிர்ந்துகொள்வதாக விருதாளர் அறிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் சர்வதேச ஆசிரியர் பரிசு வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு யுனெஸ்கோ பொருளுதவி அளித்து வருகிறது. இந்தப் பரிசுத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் 140 நாடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து இறுதிக்கட்டத்துக்கு 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து ரஞ்சித்சிங் திசாலே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.

யார் இந்த ரஞ்சித்சிங் திசாலே?

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலே (32). 2009-ம் ஆண்டில் சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி ஜில்லா பரிஷத் ஆரம்பப் பள்ளியில் பணிக்கு இணைந்தார் ரஞ்சித். அவர் வரும்போது பள்ளிக் கட்டிடம் பாழடைந்து மாட்டுத் தொழுவத்துக்கும் குப்பைகளைக் கொட்டி வைக்கும் அறைக்கும் நடுவில் இருந்தது. முதலில் கட்டிடத்தைச் சீரமைத்த ரஞ்சித், பின்னர் உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தார். அத்துடன் க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்களுக்கு ஆடியோ, வீடியோ வடிவிலும் பாடங்களை ஒருங்கிணைத்தார்.

இதன் மூலம் கிராமத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். 100 சதவீதம் பெண் குழந்தைகளின் பள்ளி வருகையை உறுதி செய்தார். ரஞ்சித்தின் பள்ளி அடைந்த வளர்ச்சி, மற்ற கிராமப் பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்தது. 2017-ல் மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் க்யூ ஆர் கோடு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல மத்தியக் கல்வி அமைச்சகமும் 2018-ல் என்சிஇஆர்டி புத்தகங்கள் அனைத்திலும் க்யூ ஆர் கோடு கொண்டதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தது.

எல்லைகளைத் தாண்டுவோம்

அடுத்ததாக பதற்றமான, முரண்பாடுகளைக் கொண்ட பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களிடம் அமைதியை ஏற்படுத்தும் விதமாக "எல்லைகளைத் தாண்டுவோம்" என்ற பொருள் கொள்ளும் வகையில் Let’s Cross the Borders என்ற திட்டத்தையும் தொடங்கினார் ரஞ்சித்சிங். இத்திட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல், இராக் மற்றும் ஈரான் மற்றும் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இளைஞர்களை ஒருங்கிணைத்தார். இந்த வகையில் 8 நாடுகளில் இருந்து சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர்.

வீட்டிலேயே ஆய்வகம்

அதேபோலத் தன் வீட்டிலேயே சொந்தமாக ஆய்வகத்தை உருவாக்கி, அறிவியல் ஆய்வுகளை மாணவர்களுக்கு சுவாரசியமாக விளக்குவதிலும் ரஞ்சித்சிங் ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் தனது மாணவர்களை உலகம் முழுவதும் மெய்நிகர் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறார்.

சர்வதேசப் பரிசு குறித்து ஆசிரியர் ரஞ்சித்சிங் கூறும்போது, "ஆசிரியர்கள்தான் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள். ஆசிரியர்கள் கொடுப்பதிலும் பகிர்வதிலும் எப்போதுமே நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். இதனால் எனக்குக் கிடைத்துள்ள பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை இறுதிக் கட்டத்துக்குத் தேர்வான 10 போட்டியாளர்களிடமும் சமமாகப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களின் வியக்கத்தக்க பணிக்காக என்னுடைய ஆதரவுக் கரம் இது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகத்தையே மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதன்மூலம் இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா சுமார் ரூ.41 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x