Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தும் ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம்- சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி எம்.ரவி தகவல்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்று தமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி எம்.ரவி தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ என்ற தலைப்பில்யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சியைஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி டாக்டர் எம்.ரவி, ஐபிஎஸ், அஸ்ஸாம் காஸிரங்கா தேசிய வன உயிரின பூங்காவின் உதவி வனப் பாதுகாவலர் பி.பிறைசூடன், ஐஎஃப்எஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சியாளர்கள் சக்திய கிருஷ்ணன், சந்துரு ஆகியோர் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கூடுதல் டிஜிபி எம்.ரவி: தகுதியும், திறமையும் இருந்தால் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெறலாம். யுபிஎஸ்சி தேர்வுகள் 100 சதவீதம் திறமை அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதில் வெற்றிபெற சிபாரிசோ, செல்வாக்கோ தேவையில்லை. தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை வெற்றிக்கான தாரக மந்திரங்கள். சிவில் சர்வீசஸ் தேர்வை இந்தியா முழுவதும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் எழுதினாலும் அதில் 1,000 பேர்தான் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களிலும் தோராயமாக 100 பேருக்கு ஐஏஎஸ், 100 பேருக்கு ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணி கிடைக்கிறது.

வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு முதல் தடைக்கல் தயக்கம்தான். அதைவிட்டொழிக்க வேண்டும். நான் 8-ம்வகுப்பு படித்தபோது எனது பாடப்புத்தகத்தில் ‘ரவி, ஐபிஎஸ்’ என்று எழுதி வைத்தேன். அப்போது எனக்கு ஐபிஎஸ் என்பதன் விரிவாக்கம்கூட தெரியாது. ஐபிஎஸ்என்றால் காவல்துறையில் மிக உயர்ந்த பணி என்பது மட்டுமே தெரியும். அது எனது ஆழ்மனதில் பதிந்துவிட்டது. நாம் எதை சாதிக்க விரும்புகிறோமோ அதை ஆழ்மனதில் பதித்து வைக்க வேண்டும். அதை நோக்கி செயல்பட்டால் வெற்றி உறுதி.

அறிவுப்பூர்வமான கடின உழைப்பு இருந்தால், சிவில் சர்வீசஸ் தேர்வு ஒன்றும் நாம் நினைப்பது போல் மிகக் கடினமான தேர்வு அல்ல. தேர்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு சோர்வடைந்து விடக்கூடாது. தோல்விகள் நம்மை பண்படுத்தும். கவனம் சிதறாமல் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நுனிப்புல் மேயாமல் பாடங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். தினமும் நாளிதழ்களை வாசித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேர்வு தகுதி அடிப்படையில் நடக்கும் தேர்வு என்பதை உணர்ந்து கொண்டாலே போதும்.

ஐஎஃப்எஸ் அதிகாரி பி.பிறைசூடன்: சிவில் சர்வீசஸ் தேர்வு மிகவும் கடினமானதேர்வு என்ற ஒரு மாயை நிலவுகிறது. அது உண்மை அல்ல. சரியான வழிகாட்டுதலும் உழைப்பும் இருந்தால் இந்த தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும். இது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கியது.

முதல்நிலைத் தேர்வானது பொதுஅறிவையும், முதன்மைத் தேர்வானதுசிந்தனைத் திறனையும், நேர்முகத் தேர்வானது ஆளுமைத் திறனையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். வரலாறு, புவியியல் அரசியல் அறிவியல், பொருளாதாரம், நடப்புக்கால நிகழ்வுகள், சர்வதேச அமைப்புகள், சமூகப்பிரச்சினைகள் குறித்து தெரிந்திருந்தால்முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறலாம்.

முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 60 சதவீதம் படிப்புக்கும், 40 சதவீதம் எழுத்துத் திறனையும் சோதிப்பதாக இருக்கும். சிபிஎஸ்இ 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்கள் படிப்பது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளரும் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சக்திய கிருஷ்ணன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பது தெரிந்தால்வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது தவறு. பொதுவாக ஏதேனும் குறித்து பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ பலதரப்பட்ட கருத்துகளும், புள்ளி விவரங்களும் தேவைப்படுகின்றன.

வெவ்வேறு துறைகளில் பெற்ற அறிவை ஒட்டுமொத்தமாக கலந்து பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இத்தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்களில் 50 சதவீதம் பேர் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்கள். முதன்மைத் தேர்வை எதிர்கொள்வதுதான் பலருக்கு சிரமமாக இருக்கும்.

யுபிஎஸ்சி-யின் தேர்வு உத்தி நமக்கு பிடிபட்டால் எளிதாக ஜெயித்துவிடலாம். முதன்மைத் தேர்வை பொறுத்தவரை நாம் சிந்திப்பதை எழுத்து வடிவில் விரைவாக, குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து, சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளர் சந்துரு பேசும்போது, “மத்திய சமூகநீதி அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை மூலம் எங்கள் அகாடமியில் ஆண்டுதோறும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் 50 பேருக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம். இதுதவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக இலவச பயிற்சி வழங்குகிறோம். மேலும், திறமையான 20 ஏழை மாணவர்களுக்கு சிகரம் ஐஏஎஸ் அகாடமி வாயிலாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணையதளத்தில் ஏப்ரல், மே மாதத்தில் வெளியிடப்படும்” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை தவற விட்டவர்கள் https://bit.ly/3nNtTmi என்ற யூடியூப் லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x