கரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 

கரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 
Updated on
1 min read

கரோனா நோயாளிகள் அதிகரித்தால் கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்று அம்மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு கர்நாடகாவில் நவம்பர் 17-ம் தேதி அன்று கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

எனினும் கல்லூரிகள் திறக்கப்பட்ட 6 நாட்களில் 130க்கும் அதிகமான மாணவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர், ''இதேபோன்று கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மீண்டும் கல்லுரிகளை மூடும் முடிவுக்கு வரவேண்டி இருக்கும். இதற்கு மாற்று இல்லை.

எனினும் மாணவர்களின் நலனைப் பாதுகாப்பது போல் அவர்களின் எதிர்காலத்தையும் கட்டமைக்க வேண்டும். அத்தகைய மிகப் பெரிய பொறுப்பு இருந்ததால்தான் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைப் படிப்படியாகத் திறக்க முடிவு செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in