Last Updated : 20 Nov, 2020 01:25 PM

 

Published : 20 Nov 2020 01:25 PM
Last Updated : 20 Nov 2020 01:25 PM

புதுச்சேரியில் தனியார் சுயநிதி, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு 50% இட ஒதுக்கீடு கிடைக்குமா?- அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் தனியார் சுயநிதி, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, நடப்புக் கல்வியாண்டு முதல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

புதுச்சேரியில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி தவிர்த்து மீதமுள்ளவை தனியாரிடத்தில் உள்ளன. இதில் 3 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும். முக்கியமாகத் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் புதுச்சேரிக்கு ஒரு இடத்தைக் கூட ஒதுக்கீடு செய்வதில்லை. அவற்றில் தற்போது மொத்தம் 1,579 மருத்துவ இடங்கள் உள்ளன.

ஆனால், 363 மருத்துவ இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாநில மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. 1,217 மருத்துவ இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. மத்திய அரசின் 2019 மருத்துவச் சட்ட மசோதாவை அமல்படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்காததால் நீட் மதிப்பெண் 400 எடுத்தும் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு இடம் கிடைக்காத அவலம் நிலவுகிறது.

இதையடுத்து, குறிப்பாக 7 தனியார் சுயநிதி மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் பெறும் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2019 மருத்துவச் சட்ட மசோதாவை புதுச்சேரியில் அமல்படுத்தி மருத்துவத்தில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 830 மருத்துவ இடங்களைப் பெற்றுத் தரவேண்டும், இந்த ஆண்டு 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற்றுத் தரவில்லை என்றால் காங்கிரஸ் அரசைக் கண்டித்துத் தொகுதி வாரியான தெருமுனைப் பிரச்சாரம் செய்வோம்.

அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பெற்றோர்களை ஒன்றுதிரட்டி ஒருநாள் அடையாளக் கடையடைப்பு நடத்துவோம். அதேநேரம் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தால் புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு விழா நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில மாணவர்கள், பெற்றோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் பாலா கூறுகையில், "மத்திய அரசு ஆணைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகள், சிறுபான்மையினரால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களைத் தமிழகம் பெறுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் ஐம்பது விழுக்காடு மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டில் பெற புதுச்சேரி அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், "புதுச்சேரி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட50% இட ஒதுக்கீடு பெறும் சட்டத்தினைக் காலம் தாழ்த்தாமல் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி தொடங்கும்போது உள்ளூர் மாணவர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்குவதாகக் கூறிக் கல்லூரியைத் தொடங்கிவிட்டு தற்போது 30% இடங்களை மட்டுமே அரசிற்கு வழங்குகிறார்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அரசு ஒதுக்கீட்டைப் போராடியே பெறும் சூழல் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் செல்வம் கூறுகையில், "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித அரசிற்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசைப் பட்டியலையோ கலந்தாய்வையயோ நடத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலை சென்டாக் வெளியிட்டால் அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக அர்த்தம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்த மாநிலங்களுக்கு 50 சதவிகித மருத்துவக் கல்வி இடங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் எனும் சட்டம் அமலுக்கு வந்தவிட்டது. அந்தச் சட்டத்தின்படிதான் இந்த ஆண்டிற்கான மருத்துவக் கலந்தாய்வினை நடத்த வேண்டும். துணைநிலை ஆளுநரும் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில்,"புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கும் முடிவை அமைச்சரவையில் எடுத்துள்ளார். தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒரு மருத்துவ இடத்தைக்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஐம்பது சதவீத ஒதுக்கீடு தொடர்பான கோப்பு மத்திய அரசின் வசம் உள்ளது. உள்துறையிலிருந்த கோப்பு தற்போது சுகாதாரத்துறையிடம் உள்ளது. அதற்கான ஒப்புதலைப் பெற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனைச் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இவ்விவகாரத்தைக் கவனித்து வருகிறார்கள். அதற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு சட்டப்பேரவையைக் கூட்டிச் சட்டமாக இயற்றிய பிறகே நடைமுறைப்படுத்த முடியும். கல்வியில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி செயல்படுகிறோம். தனியார் பல்கலைக்கழகம் அமைந்தால் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காது என்பதை ஏற்க முடியாது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x