

எம்பிபிஎஸ் துணைத் தேர்வுகளை விரைந்து நடத்த வேண்டும் என்று மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இதனால் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் துணைத் தேர்வுகளை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் அடுத்த ஆண்டு செல்வதற்குத் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆளும் பாஜக அரசால் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் மீது ஏராளமான புகார்கள் சுமத்தப்படுவதைத் தொடர்ந்து இந்த ஆணையம் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டது.
முன்னதாகத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் சார்பிலேயே தற்போது அறிவுறுத்தப்பட்டிருப்பதால், தேர்வுத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.