

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5% உள் இட ஒதுக்கீட்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.ரம்யா, தமிழக அளவில் 10-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். நெசவுத் தொழிலாளியின் மகளான ரம்யா, இதயநோய் மருத்துவ நிபுணராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி நுழைவுத் தேர்வில் ( நீட்) வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியலில், சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.ரம்யா, தமிழக அளவில் 10-வது இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளார். மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஒதுக்கீட்டில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
கே.மோரூர் அருகில் உள்ள சவுல்பட்டி கொட்டாய்ப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்- நதியா தம்பதியின் மகள் ஜி.ரம்யா. அவரது தாயார், அவரது தந்தைக்கு உதவியாக, நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மாணவி ஜி.ரம்யா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 533 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். அப்போது, அரசுப் பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரு வார காலம் மட்டும் சென்ற நிலையில், பயிற்சி மையம் தொலைதூரத்தில் இருந்ததால், பயிற்சியைக் கைவிட்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
மாணவி ஜி.ரம்யா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள், பிளஸ் 1-ல் 512, பிளஸ் 2 வகுப்பில் 533 மதிப்பெண்கள் எனப் பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்த ரம்யாவின் திறனை அறிந்த பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத ஊக்குவித்தனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த ஜி.ரம்யாவை, அவரது பெற்றோர், ராசிபுரத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். நெசவுத் தொழிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், தனது மகளின் குறிக்கோளுக்காக ரூ.1.10 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தார் அவரது தந்தை. விடாமுயற்சிக்குப் பலனாக, மாணவி ரம்யாவின் மருத்துவக் கல்வி கனவு, தற்போது நனவாகியுள்ளது. ரம்யாவின் மாநில அளவிலான சாதனையால் அவரது கிராம மக்கள், கே.மோரூர் அரசுப் பள்ளி என அனைவருமே பெருமையடைந்து, மாணவியைப் பாராட்டி, பேனர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி ஜி.ரம்யா கூறுகையில், ''மருத்துவராக வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. கடந்த ஆண்டே பிளஸ் 2 பாடத்திட்டம் மாறிவிட்டதால், தற்போதைய பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்களையும் வாங்கிப் படித்தேன். பெற்றோரின் ஆசி, அவர்கள் கொடுத்த ஊக்கம், பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் ஆகியவை எல்லாம் சேர்ந்து, என்னுடைய மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கியுள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்ததற்கு முக்கியக் காரணம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான். இதயநோய் சிகிச்சைக்கான மருத்துவராக வேண்டும் என்பது எனது ஆசை'' என்றார்.
ரம்யாவின் தந்தை கோவிந்தராஜ் கூறுகையில், ''எங்களுக்கு 3 மகள்கள். மூத்த மகள் ரம்யா. 2-வது மகள் கவுசல்யா பிளஸ் 1 வகுப்பிலும், 3-வது மகள் மதுமித்யா 6-வது வகுப்பிலும் பயில்கின்றனர். நெசவுத் தொழில் வருவாய் குறைவாக இருந்தாலும், ரம்யாவின் ஆசைக்காக அவரைத் தனியார் நீட் கோச்சிங் மையத்தில் சேர்த்தோம்.
ரம்யாவின் படிப்பு ஆர்வத்தைக் கவனித்த பயிற்சி மைய நிர்வாகிகள், வசதியில்லாத நிலையில் கட்டணத்தைச் சிறிது சிறிதாகச் செலுத்திய போதிலும், அதனை ஏற்றுக் கொண்டனர். ரம்யா, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்று மருத்துவக் கல்விக்குத் தேர்வாகி இருப்பது, எங்கள் குடும்பத்துக்குப் பெருமையாக உள்ளது'' என்றார்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் தேர்வாகி, சேலம் மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.