Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தொடக்கம்: நவ.7-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வுக்கு வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சிறப்பு, தொழிற்பிரிவு, பொதுப்பிரிவு என மொத்தமாக 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின. அதன்படி, மொத்தமாக 91 ஆயிரத்து 959 இடங்கள் காலியாகவே இருந்தன.

இந்நிலையில், காலி இடங்களுக்கான துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பை உயர்கல்வித் துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு முடிவில் நிரம்பாத இடங்களுக்கு 12-ம் வகுப்பில் சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களும், பொது கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவர்களும் www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் நவ. 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பத் தொகை ரூ.500-ஐ செலுத்தவேண்டும். அதேபோல், மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு வழிகாட்ட தமிழகம் முழுவதும் 52 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இணையதளம் மூலமாகவே மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். சான்றிதழ்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்கள் பதிவு செய்த அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள். அப்போது குறிப்பிட்ட தேதியில் உதவி மையத்துக்கு நேரடியாக வந்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற 044-22351014 / 1015 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x